Our Feeds


Friday, May 26, 2023

SHAHNI RAMEES

சிறுமி துஷ்பிரயோகம் - இராணுவ சிப்பாய்க்கு 15 வருட கடூழிய சிறை...!

 

பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.



2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.



பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டின் அடிப்படையில் அந்தப் பகுதி இராணுவ முகாமில் பணியாற்றிய இராமச்சந்திர ஆரியரட்ண என்ற இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். அவர் கடமையிலிருந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.



சந்தேக நபருக்கு எதிராக வவுனியா நீதிவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து சந்தேகநபருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.



வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று நேற்று தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.



“சிவில், பொலிஸ் சாட்சியங்கள் மற்றும் நிபுணத்துவ சாட்சியங்களின் அடிப்படையில் வழக்குத் தொடுநர் எதிரி மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபித்துள்ளார். இரண்டு குற்றச்சாட்டுகளிலும் எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுகிறது” என்று மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



“சிறுமியை பாதுகாவலரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து அழைத்துச் சென்றார் என்று எதிரி மீதான முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.



பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்படுத்தினார் என்ற எதிரி மீதான இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.



பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை எதிரி வழங்கவேண்டும் என்பதுடன், 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தவேண்டும். செலுத்தத் தவறின் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும்” என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பளித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »