(இராஜதுரை ஹஷான்)
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்களிப்போம். மக்களுக்கு ஆதரவாக செயற்பட்ட ஜனக ரத்நாயக்கவுக்கு எதிராக வாக்களிக்கும் தரப்பினர் தொடர்பில் நாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்துக்கு அமைய ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை உண்மையில் செயற்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளன.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமானது. இருப்பினும், அரசியலமைப்புக்கு அமைய நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை விடுவிக்காமல் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை அரசாங்கம் மலினப்படுத்தியுள்ளது.
பொது மக்களுக்காக செயற்படுவது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். முறையற்ற மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார். தமது தலைவர் தெரிவுசெய்த நபரை பதவி நீக்கும் பிரேரணைக்கு எவ்வாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்பதை எதிர்பார்த்துள்ளோம்.
அரசாங்கத்தின் நோக்கத்துக்கமைய செயற்படாத காரணத்தினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவரை பதவி நீக்கினால் ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்படுவது சந்தேகத்துக்குரியது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவரவுள்ள குற்றப் பிரேரணைக்கு எதிராகவே வாக்களிப்போம் என்றார்.