தெல்தெனிய கெங்கல்ல பிரதேசத்தில் உள்ள கார் விற்பனை நிலையமொன்றில் நேற்று காலை ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் புகுந்து பாதுகாவலர்களைக் கட்டிப்போட்டுவிட்டு சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான மூன்று டிஃபென்டர் ஜீப்கள் மற்றும் வேன் ஒன்றைத் திருடிச் சென்றுள்ளதாக தெல்தெனிய தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருடப்பட்ட வாகனங்களில், வத்தேகம பகுதியில் உள்ள வாகன திருத்தும் நிலையத்தில் இரண்டு ஜீப்கள் பிரிப்பதற்கு தயாராக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தேகம சிறிமல்வத்த பிரதேசத்தில் உள்ள பிரபல வாகன திருத்தும் நிலையத்தில் ஒன்றில் இந்த ஜீப் வண்டிகள் மறைத்து வைக்கப்பட்டு அவற்றை பிரிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இரண்டு ஜீப் வண்டிகளும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதுடன், அதில் பயணித்த இருவர் மற்றும் வாகன திருத்தும் நிலையத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையர்களை கண்டுபிடிப்பதற்காக கண்டி அஸ்கிரிய பொலிஸ் மோப்ப நாய்களை கொண்டு நேற்று விசேட தேடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க மற்றும் மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தெல்தெனிய மற்றும் வத்தேகம பொலிஸார் இணைந்து இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
