Our Feeds


Tuesday, July 4, 2023

ShortNews

320 ஆண்டுகள் வெளிவந்த உலகின் பழைமையான பத்திரிகைக்கு மூடுவிழா



ஆஸ்திரியா நாட்டின் மிகவும் பிரபலமான பத்திரிகையும், உலகின் மிகப் பழமையான செய்தித்தாளுமான 'வெய்னர் ஜெய்துங்' (Wiener Zeitung ) இனி அச்சேறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


320 ஆண்டு கால வரலாறு கொண்ட பத்திரிகையின் அச்சுப் பதிப்பின் மூடுவிழா அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையின் கடைசி அச்சுப் பிரதியில் வாசகர்கள் விவரம் அறிந்து கொள்ளும்விதமாக ஒரு விவரக் குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. 2023 ஜூன் 29 அன்று வெளியான பத்திரிகையில் அந்தச் சுருள் இணைக்கப்பட்டிருந்தது. அதில் இனி 'வெய்னர் ஜெய்துங்' இணையவழியில் மட்டுமே வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 

1703 ஓகஸ்ட் 8 முதல் 'வெய்னர் ஜெய்துங்' பத்திரிகை செயல்பட்டு வருகிறது. அப்போது ஆஸ்திரியாவில் ஹாப்ஸ்பர்க் அரசாட்சி நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஜூலை 7ஆம் திகதியுடன் 'வெய்னர் ஜெய்துங்' அச்சு அலுவலகம் மூடப்படுகிறது.

1703-ல் இந்தப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது ’Wiennerisches Diarium’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பல அரசாட்சிகள், அதிபர்களைக் கண்ட இந்தப் பத்திரிகையின் கடைசிப் பிரதியின் முகப்புப் பக்கச் செய்தியில் "320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 10 பேரரசர்கள், 2 குடியாட்சிகள், ஒரு செய்தித்தாள்" என்று பெருமிதக் குறிப்பு இடம்பெற்றிருந்தது. இது வாசகர்களை உணர்வுபூர்வமாக நெகிழச் செய்தது.

'வெய்னர் ஜெய்துங்' பத்திரிகை ஆஸ்திரிய அரசுக்கு சொந்தமானது என்றாலும்கூட அதன் ஆசிரியக் குழு முற்றிலும் சுதந்திரமாக இயங்கியது.

 இருப்பினும் அண்மையில் ஆஸ்திரிய அரசு கொண்டுவந்த ஒரு சட்டத்தால் இப்பத்திரிகைக்கும் பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்பட்டது. இதனால் 63 பேர் கொண்ட ஆசிரியர் குழுவில் இருந்து பலரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடைசியாக 20 பேர் மட்டுமே ஆசிரியர் குழுவில் இருந்தனர். சுவாரஸ்யமான நடையில் உள்ளூர், வெளிநாட்டுச் செய்திகள், கலாசார, வணிகச் செய்திகளை வழங்கி 'வெய்னர் ஜெய்துங்' பத்திரிகை பெயர் பெற்றது.

ஆஸ்திரிய மக்களின் மனம் கவர்ந்த இந்தப் பத்திரிகை இனி இணையதளமாக செயல்படவுள்ள நிலையில் மாதம் ஒரு பிரதி மட்டும் அச்சிடுவது பற்றி நிறுவனம் ஆலோசித்து வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »