Our Feeds


Tuesday, July 4, 2023

ShortNews

35 லட்சம் செலவில் புதிய மிம்பர் கட்டும் மருதமுனை மஸ்ஜிதுன் நூர் நிர்வாகம்!



(நூருல் ஹுதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ்)


அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்திலுள்ள பூர்வீக வரலாற்றைக்கொண்ட பள்ளிவாசல்களில் ஒன்றான மஸ்ஜிதுல் நூர் ஜும்மா பள்ளிவாசலில் புதிய மிம்பர் அமைக்கும் வேலைத்திட்டம் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவரும் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.ஐ.எம். முஹர்ரப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலின் கட்டட நிர்மாணப் பணிகளை பூரணப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


இதன் ஒரு கட்டமாகவே இந்த நவீன முறையிலான மர வேலைப்பாடுகள் நிறைந்த மிம்பர் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி உட்பட பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், கட்டட குழுத்தலைவர், செயலாளர் உட்பட அதன் உறுப்பினர்கள், வர்த்தகப்பிரமுகர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.


இங்கு உரையாற்றிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபை தலைவர்,


பள்ளிவாசலின் புதிய மிம்பர் அமைப்பதற்கான பணி ஒரு சில தினங்களில் பூர்த்தி செய்யப்படும். இதற்கு சுமார் 35 இலட்சம் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மருதமுனையின் வரலாற்றுப்பூர்வீக பள்ளிவாசல்களாகக் காணப்படும் மஸ்ஜிதுல் கபீர், மஸ்ஜிதுல் நூர் ஆகிய பள்ளிவாசல்களில் வாரம் விட்டு வாரம் ஜும்ஆ தொழுகையை நடத்துவதற்கு நாம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். 


இது ஊரின் எதிர்காலம் மற்றும் ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு செயற்படுவதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். தற்போது பல பள்ளிவாசல்களிலும் ஜும்மா தொழுகைகள் இடம்பெற்று வருகின்றன. இதனை ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைக்குள் கொண்டு வர வேண்டும். இது தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களிடம் நாம் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம் எனத் தெரிவித்தார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »