மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராஜாங்கனை சத்தாரதன தேரர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இராஜாங்கனை சத்தாரதன தேரர் புதன்கிழமை (5) கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் 29 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இராஜாங்கனை சத்தாரதன தேரர் அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
சமய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிடுவதாக தெரிவித்து பாஹியங்கல ஆனந்த சாகர தேரரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன்படி இன்று குறித்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை பரிசீலித்த கோட்டை நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
