Our Feeds


Sunday, July 2, 2023

ShortNews

நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதிடம் கையளிக்கப்படும் சாத்தியம்!



(நா.தனுஜா)


உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான முக்கிய பரிந்துரைகளை உள்ளடக்கிய நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச்செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வுபெற்ற மாவட்டச்செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ்நகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் அடங்கிய ஆணைக்குழு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

கடந்த இருவருடகாலமாக அந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் பல்வேறு தரப்பினர் ஆஜராகி சாட்சியமளித்திருக்கும் நிலையில், அந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைவாகவே தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதுமாத்திரமன்றி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைபில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த ஆணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவந்த நிலையில், அதன் இறுதி அறிக்கை டிசம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த ஆணைக்குழுவுக்கான ஆணை இவ்வாண்டு ஜனவரி 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து கடந்த மேமாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இறுதி அறிக்கையை அச்சிடும் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தின் விளைவாக ஆணைக்குழுவினால் மேமாத இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கமுடியாத நிலையேற்பட்டது. அதனையடுத்து அதற்கான ஆணை இம்மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே, இறுதி அறிக்கையின் தயாரிப்புப்பணிகள் அனைத்தும் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், எதிர்வரும் வாரத்துக்குள் அவ்வறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுஇவ்வாறிருக்க தமது இடைக்கால அறிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல்லினத்தவரையும், பல்துறைசார் நிபுணர்களையும், பாதிக்கப்பட்ட தரப்பினரையும் உள்ளடக்கிய நம்பத்தகுந்த பொறிமுறையாக அமையவேண்டியது அவசியம் எனவும், ஆணைக்குழுவின் ஆணையாளராக தமிழ் பேசக்கூடிய ஒருவரே நியமிக்கப்படவேண்டும் எனவும் ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையில் பரிந்துரைக்குமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »