நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலையில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் பிற்பகல் நேரங்களில் கடும் உஷ்ணமான காலநிலையும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் இந்நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்து காணப்படுகின்றன .
மேலும் அதிகாலையில் அதிகம் குளிரான நிலையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதேவேளை பனி பொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் அண்மைக்காலமாக நுவரெலியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை மாற்றம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நானுஓயா நிருபர்