Our Feeds


Tuesday, May 14, 2024

Zameera

உலகின் மிகப்பெரிய விமான நிலையம்


 உலகின் மிகபெரிய விமான நிலையமான துபாயின் அல் மாக்தோம் (Al Maktoum) சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.

இதன் பணிகள் முழுவதுமாக நிறைவடையும்போது இதுதான் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்.

இங்கு 260 மில்லியன் பயணிகளை கையாளும் அளவிற்கு வசதியுள்ளது. இந்த விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பரப்பு 12,000 கால்பந்து மைதானம் அளவிற்கு இருக்கும் என கூறப்படுகிறது. அல் மாக்தோம் சர்வதேச விமான நிலையத்தின் புதிய பயணிகள் டெர்மினலுக்கான வடிவமைப்பிற்கு சமீபத்தில் தான் துபாய் மன்னர் ஷேக் முகமது ரஷீத் அல் மாக்தோம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதன் மதிப்பு 34.85 மில்லியன் அமெரிக்க டாலராகும். தற்போது இருக்கும் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அளவை விட புதிய விமான நிலையம் ஐந்து மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் இனி வரும் காலங்களில் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இங்கு மாற்றப்படும் என ஷேக் முகமது தெரிவித்துள்ளார்.

இந்த விமான நிலையத்தில் 5 ஓடுபாதைகளும் வருடத்திற்கு 12 மில்லியன் டன் கார்கோ கையாளும் வசதியும் உள்ளது இதன் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இந்த புதிய விமான நிலையத்தின் ஒட்டுமொத்த பரப்பு 70 சதுர கிலோ மீட்டராகும்.

இந்த விமான நிலையம் 400 விமான வாயில்களையும் 5 ஓடுபாதைகளையும் கொண்டுள்ளது. மேலும் விமான போக்குவரத்து துறையில் முதல்முறையாக இங்கு புதிய விமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்த உள்ளது என ஷேக் முகமது X தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுதவிர தெற்கு துபாயில் உள்ள இந்த விமான நிலையத்தை சுற்றிலும் புதிய நகரம் ஒன்றை அமைக்கவும் ஷேக் முகமது அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய விமான நிலையம், துறைமுகம், நகர்ப்புற மையம் என புதிய உலகளாவிய மையமாக துபாய் திகழ்வதாக ஷேக் முகமது கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த விமான நிலையத்தை சுற்றி அமையவுள்ள நகரங்களில் லட்சக்கணக்கானோருக்கு வீடு கட்டி கொடுக்கவுள்ளோம். எங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் நிலையான வளர்ச்சியை உறுதி செயும் வகையில் எதிர்கால தலைமுறையினருக்கான புதிய திட்டங்களை கட்டமைத்து வருகிறோம். இந்த விமான நிலையத்தில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விமான துறையை சேர்ந்த பல முன்னனி நிறுவனங்கள் அமையவுள்ளது” என்றார்.

இந்த விமான நிலையம் முன்னனி விமான நிறுவனமான எமிரேட்ஸ் மற்றும் அதன் பட்ஜெட் பிரிவு நிறுவனமான ஃப்ளைதுபாயின் புதிய மையமாக திகழவுள்ளது. மேலும் உலகின் பல நாடுகளை துபாயோடு இணைக்கும் பாலமாகவும் இது செயல்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »