Our Feeds


Tuesday, May 14, 2024

ShortNews Admin

இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்த சட்டமூலத்தால் ஊடக சுதந்திரம் இல்லாது போகிறது.

இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்த சட்டமூலத்தால் ஊடக சுதந்திரம் இல்லாது போகிறது. எனவே இதற்கு எமது கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். தயவு செய்து இதனை மீளப் பெறுங்கள் -  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

மக்களின் கருத்துகளை போதியளவு ஆராயாமல் இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள்.

இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டம் தொடர்பில் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.  இந்த வரைவில் சுதந்திர ஊடகத்திற்கு பாதகம் விளைவிக்கும் பல முன்மொழிவுகள் உள்ளன. போதியளவு மக்கள் மத்தியில் கலந்தாலோசிக்காமல், ஏனைய தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியாமல் இந்த திருத்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டத்தில் சுதந்திர ஊடகத்திற்கு பல பாதகமான பல ஷரத்துகள்  உள்ளடக்கப்பட்டுள்ளன. இழப்பீட்டைச் செலுத்தி தமது ஊடக அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளுதல், ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு அமைய பொது மக்களின் நலன் தொடர்பில் ஆணைக்குழுவே ஒரு பொருள்கோடலை வழங்கி அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கான யோசனையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக எதிர்ககட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

சுயாதீனமான சுதந்திரமான நாட்டில் சுயாதீனமான சுதந்திரமான ஊடகம் இருக்க வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க கட்டுப்பட்டுள்ள நாமனைவரும் இலங்கை தொலைத் தொடர்புகள் திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற ஷரத்துக்கள் தொடர்பில் எமது கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகிறோம். இதனை நாம் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவும் எதிர்பார்க்கிறோம். இதனை மேற்கொள்வதற்கு முன்னர் அரசாங்கத்திடம் ஓர் கோரிக்கையை முன்வைக்கிறோம். தயவு செய்து இதனை மீளப் பெறுங்கள். மக்களின் நலன், ஊடகங்களின் நலன் தொடர்பில் இந்நாட்டில் தீர்மானங்களை எடுப்பதற்கு உங்களுக்கு உரிமையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்துக்கு  சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களின் நலன் ஒருபுறமிருக்க இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிலுள்ள அதிகாரிகள் டிசிபி வழங்குவதாகவும், ஆளுங்கட்சிக்கு வருமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரசாரம் செய்கின்றனர். இது இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கடமையல்ல. ஆகவே TRC இன் கடமைகளை ஆணைக்குழுவிற்கு கையளித்தால், பொருட்கோடலை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கினால் இந்நாட்டின் ஊடக சுதந்திரம் அற்றுப்போகும்.

 இதை நீங்களே இந்த சபையில் சமர்ப்பித்தீர்கள். ஆகவே இந்த ஷரத்துகளை மீளப்பெறுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »