Our Feeds


Thursday, August 15, 2024

Sri Lanka

நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பேன்!


நாட்டுக்குள் புதிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த தாம் ஆரம்பித்திருக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்று, நாட்டில் அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்காக செப்டெம்பர் 21 ஆம் திகதி மக்கள் ஆணையைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று (15) வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவது ஒருபுறமிருக்க, அரசாங்கத்தை கூட கொண்டுச் செல்ல முடியாதென சிலர் கூறிய போது, இரண்டு வருடங்களுக்குள் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் நிலைக்கு கொண்டு வந்த தன்னிடம், இனிவரும் காலங்களிலும் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான வலு இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்திக்க முன்வராத தலைவர்களிடம் நாட்டை ஒப்படைப்பது பொருத்தமானதாக அமையுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, அன்று பற்றி எரிந்த நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் முன்வந்திருக்காவிட்டால் இன்றைய பங்களாதேஷின் நிலைமையை அன்றே இலங்கை சந்தித்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து பொருளாதாரத்தையும் பலப்படுத்தி ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்தும் நிலைக்கு நாட்டை கொண்டு வந்த தனக்கு, ஆதரவளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், எம்.பிக்கள், அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், முப்படையினர், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

''பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கும், எம்.பிக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

நான் நாட்டை பொறுப்பேற்ற 2022 ஜூலை மாதத்தில் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி அலுவலகம் அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதுடன் எனது வீட்டிற்கும் தீவைக்கப்பட்டது.

அப்போது, ​​தேர்தலை நடத்துவது ஒருபுறமிருக்க, ஆட்சி கொண்டு நடத்துவதும் சாத்தியமற்றதென பலர் நினைத்தனர். ஆனால் சபாநாயகர் உட்பட நான் பாராளுமன்றத்தை முற்றுகையிட அனுமதிக்கவில்லை. பின்னர் அந்த பாராளுமன்றம் என்னை ஜனாதிபதியாக நியமித்தது. இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து அன்றைய தினம் பாராளுமன்றத்தை பாதுகாத்தனர். இல்லையேல் இன்றைய பங்களாதேஷைப் போன்ற நிலைமையை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

எரிந்து கொண்டிருந்த நாட்டில் அந்த நிலைமையை தடுத்து இன்று நாட்டை முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம். அழிவைத் தடுக்க எதிர்க்கட்சிகள் எவரும் ஆதரவு வழங்கவில்லை. அரசாங்கத்தை பதவி விலக சொல்லிவிட்டு அவர்களும் ஓடிவிட்டனர். அரசாங்கத்திற்கு   புண்ணியமாய்ப் போக, இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. அத்தகையவர்கள் ஆட்சியை பெறுவதற்குத் தகுதியானவர்களா? என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். அவர்களிடம் நாட்டின் ஜனநாயகத்தை ஒப்படைக்க முடியுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

அன்று எரிபொருள் வரிசைகள் இருந்த நாட்டில் இன்று எரிபொருள் வரிசைகள் இல்லை. உணவுக்கும் மருந்துக்கும் வரிசைகள் இருந்த நாட்டில் இன்று அந்த வரிசைகள் இல்லை. இப்போது மக்கள் கையில் பணம் இருக்கிறது. இப்போது மக்கள் வாழக்கூடிய நாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதற்காக நான் வருந்துகிறேன்.

இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் ஓடிவிட்டனர். பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க யாரும் முன்வரவில்லை. ஆனால் இன்று இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து நாட்டை முன்னேற்றியுள்ளோம். நாடு வங்குரோத்தாகும் முன்பும் கூட மக்களுக்கு வழங்கப்படாத நிவாரணத்தை, வங்குரோத்தடைந்த காலத்தில் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத்திட்டங்கள்  செயற்படுத்தப்பட்டன. மேலும், கடந்த ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரியில் மேலும் பத்தாயிரம் அல்லது பதினைந்தாயிரம் ரூபாவால் அதிகரிக்க எதிர்பார்க்கிறோம். நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்கும் திட்டமும் எம்மிடம் உள்ளது. மேலும், அரச தொழில்வாய்ப்புகள் வழங்கும் பணிகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். தனியார் துறையிலும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் கட்டியெழுப்பப்பட்டு வரும் பொருளாதாரத்தை நாம் அனைவரும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு தொடரப்பட்டு இந்நாட்டு மக்களை வளப்படுத்தக்கூடிய புதிய பொருளாதாரம் நாட்டில் உருவாக்கப்படும்.

இன்று நாம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இந்நாட்டு மக்களின் எதிர்காலத்தை  பாதுகாக்க செப்டம்பர் 21 ஆம் திகதி எனக்கு மக்கள் ஆணையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் புதிய பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலம் கட்டியெழுப்பப்படும்.'' என்று தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான தரப்பினர்கள் உட்பட ஏராளமான ஆதரவாளர்கள் இந்ச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »