Our Feeds


Sunday, November 24, 2024

SHAHNI RAMEES

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயார் - ராஜித்த சேனாரத்ன

 

தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வழங்கி நாட்டின் தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் செல்லும் பயணத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயாராக இருக்கிறோம். இனவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லை என்ற கொள்கையை மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பகாலத்தில் எடுத்திருந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடி இருக்காது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,




ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது கொள்கை விளக்க உரையில், இனவாதத்தால் இரத்த ஆறு ஓடிய வரலாறுகொண்ட இந்த நாட்டில் , மீண்டும் அந்த நிலைக்கு இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த கூற்றை வரவேற்கிறேன். நாட்டின் அபிவிருத்திக்கு தேசியப்பிச்சினைக்கு தீர்வு முக்கியமாகும்.

மக்கள் விடுதலை முன்னணி 1980 காலப்பகுதியில் முன்னெடுத்துவந்த புரட்சியினால் நாட்டில் இரத்த ஆறு ஓடியது. இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை அவர்கள் அன்று கடைப்பிடித்திருந்தால், நாட்டில் இரத்த ஆறு ஓடி இருக்காது. வடக்கில் பிரிவினைவாத யுத்தம் ஏற்பட்டிருக்காது.

என்றாலும் அவர்களுக்கு அதிகாரம் கிடைத்துள்ள நிலையில் 35 வருடங்களுக்கு பின்னராவது இந்த உண்மை அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அதனையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். தமிழ் மக்களின் உரிமைக்காக நாங்கள் வடக்குக்கு சென்று போராடி இருக்கிறோம். அதேபோன்று முஸ்லிம் மக்களின் நியாயமான உரிமைக்காக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். தேசியப்பிச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலமே நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்ற கொள்கையிலே நாங்கள் இருந்து இருகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. 

அதனால் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வழங்கி, தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் முன்னெடுக்கும் பயணத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். நாங்கள் ஒருபோதும் அதிகாரத்துக்காக இனவாதத்தை கையில் எடுத்ததில்லை. நான் மாத்திரமல்ல, எமது தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் அரசியல் அதிகாரத்துக்காக இனவாதத்தை கையில் எடுத்ததில்லை.

ரணில் விக்ரமசிங்க பிரபல்ய அரசியல் செய்யவில்லை. அவர் எப்போதும் அறிவுப்பூர்ணமான தீர்மானங்களே எடுத்துவந்தார். அதனால் அநுகுமார திஸாநாயக்கவும் பிரபல்ய அரசியல் செய்வதைவிடுத்து, அறிவுப்பூர்ணமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இந்த தேர்தலில் வடக்கு மக்களின் மனதை வெற்றிகொள்ள தேசிய மக்கள் சக்திக்கு முடியுமாகி இருக்கிறது. இது வரலாற்று வெற்றியாகும். மக்கள் விடுதலை முன்னணி தனது இனவாத, மதவாதத்தை நிராகரிப்பதற்கு வடக்கு மக்களின் ஆதரவும் காரணமாக இருக்கலாம். அதனால் தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து, அதனை நிறைவேற்றும் வகையில் அரசாங்கத்தின் பயணம் இருக்க வேண்டும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »