ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், தூத்துக்குடி, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் விலை ஒரேயடியாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன்படி இன்று (20) காலை தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 380 - 400 ரூபாவாக இருந்ததாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் இந்த விலை உயர்வைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போதிலும், கடந்த காலங்களில் உள்நாட்டு பெரிய வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய வணிகர்கள் வெங்காயத்தை மறைத்து வைத்து விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.எஸ்.சிறிவர்தனவிடம் கேட்டபோது, தொடர் மழைவீழ்ச்சி காரணமாக தரமான வெங்காயம் கிடைக்காமையினால் தரமான வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
எதிர்காலத்தில் ஓரளவிற்கு விலை அதிகரிக்கலாம் எனவும், எனினும் அடுத்த ஒரு மாதத்தில் அதிகளவிலான பெரிய வெங்காயம் வெளிநாடுகளிலிருந்து ஓடர் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை கிடைக்கும் போது விலை குறையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.