பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தைச் சுத்தம் செய்தது
போல உள்ளூராட்சி மன்றங்களையும் சுத்தப்படுத்தி அவற்றை தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள்”என்று பெருந்தோட்ட மற்றும் சமூக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (31) இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சாமர சம்பத்துடன் எனக்குத் தனிப்பட்ட எந்த கோபங்களும் கிடையாது நாயின் வாலை நிமிர்த்த முயற்சி செய்தாலும் அதனை நிமிர்த்த முடியாது என ஒரு பழமொழி உள்ளது. ஆகவே சாமர சம்பத் போல் என்னால் செயற்பட முடியாது.
பெருந்தோட்டப் பகுதியில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகிறது அந்த வகையில் முதலில் அநேகமாக வீட்டுப் பிரச்சினை காணப்படுகிறது வீடுகள் அமைக்க வேண்டுமானால் அதற்கான காணிகள் வேண்டும் ஆகையால் அவர்களுக்கான வீட்டுரிமை, காணி உரிமை, முகவரி என்பவற்றை முதலில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்த வருடத்தில் 5,400 வீடுகள் அமைக்கப்படவுள்ளது அதற்கான பேச்சு வார்த்தைகளை எமது அமைச்சின் ஊடாக நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்கான முதற்கட்டப் பணியை எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்கவிருக்கின்றோம். கடந்த காலங்களில் அரிசிக்கான தட்டுப்பாடு நாட்டில் நிலவியது நாங்கள் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் போது நெற்களஞ்சியசாலை வெறிச்சோடிக் காணப்பட்டது.
நெற்களஞ்சியசாலையில் ஒரு லொறி மாத்திமே இருந்தது ஆகவே, சவாலுக்கு மத்தியிலே இதனைப் பொறுப்பேற்றோம் கடந்த அரசாங்கத்தை நாங்கள் விமர்சனம் செய்வதற்கு அதிகாரமில்லை இந்தப் பிரச்சினைக்கு நாம் தீர்வினைப் பெறவேண்டும்.
அதிகமான விலைக்கு நெல்லினை விற்பனை செய்தால் ஜந்து இலட்சம் ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டி நேரிடும் 76 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த அவர்களால் செய்து கொள்ள முடியாததை எமது அரசாங்கத்தின் ஊடாக செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள் எதிர்கட்சியினர்.
இந்த நாட்டு மக்களுக்குத் தெரியும் ஒரு நோயாளிக்கு ஒரே தடவையில் மருந்தினை வழங்கிக் குணமாக்குவது என்பது கடினமான செயல் என்பது தெரியும். 76 வருடமாக இவர்கள் இந்த நாட்டை வீணடித்து விட்டார்கள் மக்களிடம் ஒன்றைக் கூறுகிறோம் இந்த நாட்டை சுத்தப்படுத்தி சிறந்த நாடாக மக்களிடம் ஒப்படைப்போம்.
மக்கள் தற்போது திருடர்களை இனங்கண்டுள்ளனர் ஆகவே பாராளுமன்றத்தைச் சுத்தம் செய்தது போல உள்ளூராட்சி மன்றங்களையும் மக்கள் சுத்தப்படுத்தி தேசிய மக்கள் சக்தியிடம் ஒப்படைப்பார்கள்” எனக் குறிப்பிட்டார்.