ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய
கட்சிக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முக்கியத்துவமளித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு இருகட்சி தலைவர்களும் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.இரு கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இரு கட்சிகளினதும் இணைவு எவ்வாறானதாக இருக்கும் என்பதை தற்போது எம்மால் குறிப்பிட முடியாது. தேர்தல் மாத்திரம் எமது நோக்கமல்ல. பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைப்பதே எமது இலக்காகும்.
மேலும் பல்வேறு விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னுரிமையளிக்குமாறு இரு கட்சிகளினதும் தலைவர்களால் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் குழுக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் இருப்பதால் பேச்சுவார்த்தைகள் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் விரைவில் அவற்றை நிறைவு செய்யவே எதிர்பார்த்துள்ளோம். இணைந்து போட்டியிடும் பட்சத்தில் வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களும் அதனையே எதிர்பார்க்கின்றனர். கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதைப் போன்று உள்ளுராட்சி தேர்தலிலும் தோல்வியடையும் என்றார்.