மத்தள விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 36.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரம் விமான நிலையம் 38.5 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.
வெளிநாட்டு முன்னிலை பொறியியல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மத்தள விமான நிலையத்தை விமானம் பழுது பார்த்தல் மத்திய நிலையமாக மாற்றியமைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதென சபை முதல்வரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொதுப்போக்குவரத்து துறையில் புகையிரத சேவை பிரதான ஊடகமாக காணப்படுகிறது. தேசிய மற்றும் வெளிநாட்டு பிரயாணிகள் புகையிரத பயணத்தையே அதிகளவில் விரும்புகிறார்கள். இருப்பினும் புகையிரத சேவை ஆரோக்கியமானதாக இல்லை.
புகையிரதத்துக்காக பொதுபயணிகள் காத்துக்கொண்டிருக்கும் போது புகையிரதம் இரத்து செய்யப்பட்டது என்று அறிவிக்கப்பட்டால் பயணிகள் நடுதெருவில் நிற்க வேண்டிவரும்.
புகையிரத சேவையில் புகையிரதம் தாமதமடைதல் மற்றும் இரத்தாகுதலை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புகையிரத சேவை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் மறுசீரமைப்பக்கப்படும். அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் புகையிரத நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும்.
நாடளாவிய ரீதியில் 400 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன. இந்த ஆண்டுக்குள் இந்த பாதுகாப்பற்ற கடவைகள் புனரமைக்கப்படும். புகையிரதங்களில் மோதி இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு தொழில்நுட்ப ரீதியில் திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
வரவு, செலவுத் திட்டத்தில் புகையிரத சேவை அபிவிருத்திக்காகவும், ஏனைய பொதுபோக்குவரத்துக்காகவும் அதிக நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. புகையிரத சேவை குறித்து பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவிசாவளை முதல் இரத்தினபுரி வரையில் புகையிரத பாதையை புனரமைத்து புகையிரத சேவையை விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாதுக்கை - அவிசாவளை புகையிரத சேவை புனரமைக்கப்படும்.
புகையிரத சேவையில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன. புகையிரத சாரதிகள், பாதுகாப்பாளர்கள் உட்பட அத்தியாவசியமான பதவிகளுக்கு பெண்களை இணைத்துக் கொள்வதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கை போக்குவரத்து சபையின் உயர் பதவிகள் மற்றும் இதர பணிகளுக்கு பெண்கள் இணைத்துக் கொள்ளப்படுவர்.
புகையிரத திணைக்களம் மற்றும் துறைமுகங்கள் ஆகியவற்றை தனியார் மயப்படுத்தபோவதில்லை. இருப்பினும் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். கொழும்பு துறைமுகத்தின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு முனையங்கள் வெகுவிரைவில் அபிவிருத்தி செய்யப்படும்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது பிரவேச முனையத்தை அமைப்பதற்கான பணிகள் எதிர்வரும் ஜூலை மாதமளவில் ஆரம்பிக்கப்படும்.
அதேபோல் அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 36.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரம் 38.5 பில்லியன் ரூபா நட்ட மேற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (09) மத்தள விமான நிலையத்தில் கண்காணிப்பு கள ஆய்வினை முன்னெடுக்கவுள்ளோம். வெளிநாட்டு முன்னிலை பொறியியல் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மத்தள விமான நிலையத்தை விமானங்கள் பழுதுபார்க்கும் மத்திய நிலையமாக மாற்றியமைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு சாதகமான நிலை காணப்படுகிறது என்றார்.