Our Feeds


Saturday, March 8, 2025

Sri Lanka

விரைவில் சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு ஆரம்பிக்கப்படும் - பிரதமர்!


சுயாதீன தேசிய மகளிர் ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும்.  அரசியலமைப்பு பேரவைக்கு   நியமன பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. மகளிர் மற்றும்  சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நடைமுறைக்கு  சாத்தியமான சட்டங்கள் இயற்றப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி  அமரசூரிய  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும்   சிறுவர் அலுவல்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

சுதந்திரத்துக்கு பின்னராக 75  வருட காலத்தையும் நாங்கள் விமர்சிக்கவில்லை. அரசியல் கட்டமைப்பையே  சாபம் என்கிறோம். இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ஆகியவற்றால்  பெண்கள் முன்னேற்றமடைந்துள்ளார்கள்.  ஆசிய வலய நாடுகளில் இலங்கையின் பெண்களின் கல்வி தரம் முன்னிலையில் உள்ளது.

பாரிய போராட்டத்தின் மத்தியில் தான்  இலவச கல்வி உரிமை பெற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு காலத்தில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அதற்கு எதிராக பெண்கள் போராடி இன்று  சகல துறைகளிலும் முன்னணியில் உள்ளார்கள். இந்த முன்னேற்றத்தை வலுப்படுத்த வேண்டும்.

கல்வித்துறையை பொறுத்தவரையில் தற்போது  ஆண்களின்  கல்வி நிலை  பின்னடைந்துள்ளதை  அவதானிக்க  முடிகிறது. இது பாரியதொரு பிரச்சினையாகும். கல்வித்துறையின் ஊடாகவே ஆண் - பெண் சமத்துவத்தை உறுதிப்படுத்த முடியும். ஆகவே ஆண்களின் கல்வி நிலை குறித்து விசேட கவனம் செலுத்தப்படும்.

சுயாதீன தேசிய மகளிர்  ஆணைக்குழு வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படும். அரசியலமைப்பு  பேரவைக்கு இந்த ஆணைக்குழுவுக்கான நியமனங்கள் தொடர்பான  பரிந்துரைகள்  கிடைக்கப்பெற்றுள்ளன. வெகுவிரைவில் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்.

மகளிர் மற்றும்  சிறுவர்களின்  நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் விசேட முன்மொழிவுகள்  முன்வைக்கப்பட்டு நிதி  ஒதுக்கப்பட்டுள்ளன. சிறந்த  கலாச்சாரத்தை உருவாக்குவதன்  ஊடாகவே ஆண்- பெண் சமத்துவ நிலையை மேம்படுத்த முடியும் என்றார்.

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »