வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். பொருளாதார செயற்பாடுகள் மீண்டும் வளமைக்குத் திரும்பச் செய்யும் நோக்கிலும், நாட்டின் பொருளாதார நிலைப்புத் தன்மையைப் பாதுகாத்து மேம்படுத்துதல், அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கும் அதேநேரம், தேவையற்ற வாகன இருப்புக்கள் பேணப்படுதல், அதிகப்படியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை அதைரியப்படுத்தும் நோக்கிலேயே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு அமைய, இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும். மேலும், யாராவது ஒரு இறக்குமதியாளரினால் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 25 சதவீதமானவை ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்படாவிட்டால் குறித்த இறக்குமதியாளருக்கு வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பதிவுசெய்யப்படாத வாகனங்களுக்கு ஆகக் கூடியது 45 சதவீதம் வரையில் விதிக்கக் கூடியதாக 3 சதவீத தண்டப்பணம் அறவிடப்படும்.
அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ. த சில்வா தலைமையில் கடந்த 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இந்தத் தகவல்களை முன்வைத்தனர். இக்கூட்டத்தில் 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2421/04 மற்றும் 2421/44 ஆகிய இலக்க வர்த்ததமானி அறிவித்தல்களில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
மேலும், தனிநபர் ஒருவர் வாகனமொன்றை இறக்குமதி செய்வதாயின் ஒரு வாகனத்தை மாத்திரம் இறக்குமதி செய்ய முடியும் என்றும், வணிக ரீதியில் மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கு அவ்வாறான மட்டுப்பாடு இல்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், உள்நாட்டு இலத்திரனியல் வாகனத் துறையினைப் பாதுகாப்பதற்கான கொள்கைக்கான ஆதரவைக் கோருவது பற்றியும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. வாகனங்களை உற்பத்தி செய்வதற்கு பிணை வசதிகளைப் பயன்படுத்தும் உள்நாட்டுத் தயாரிப்பாளர்களுக்கு சுங்க இறக்குமதி வரி மற்றும் மிகைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வது குறித்த முன்மொழிவு சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2012ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழான வர்த்தக மைய ஒழுங்குவிதிகள் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் 2025 பெப்ரவரி 21ஆம் திகதி வரை மூன்று மாத காலத்திற்கு லாஃப் காஸ் பிஎல்சி நிறுவனத்தின் ஊடாக மேலதிகமாக 9000 மெற்றிக் தொன் திரவப் பெற்றோலிய வாயுவை உள்நாட்டு சந்தைக்கு வழங்குவதற்கு இந்த ஒழுங்குவிதி வெளியிடப்பட்டது.
இக்கூட்டத்தில், பிரதியமைச்சர்களான (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெரும, சதுரங்க அபேசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரக்கோன் மற்றும் (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.