Our Feeds


Wednesday, May 28, 2025

SHAHNI RAMEES

2023 தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை! - ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க

 


2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகளை

ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரத்திரட்டை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் தொடர்பான விபரம் பொலிஸ்மா அதிபருக்கு புதன்கிழமை (28) சமர்ப்பிக்கப்படும். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.


அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தமது உறுப்பினர் பட்டியல் விபரங்களை இதுவரையில் முழுமையாக சமர்ப்பிக்காத காரணத்தால் உறுப்பினர் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பதில் ஆணைக்குழு சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளது.ஆகவே 30 ஆம் திகதிக்குள் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் உறுப்பினர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு வர்த்தமானி பிரசுரம் ஊடாக  அறிவுறுத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.



தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


உள்ளுராட்சிமன்றத் தேர்தல் 2025.05.06 ஆம் திகதியன்று நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க தேர்தல் செலவுகள் ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் செலவின விபரத்திரட்டை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியிருந்தோம். தேர்தல் முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள்  குறித்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதற்கமைய விபரத்திரட்டை சமர்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் செவ்வாய்க்கிழமை (27) நிறைவடைந்தது.


 தேர்தல் செலவினங்களை சமர்ப்பிப்பதற்கு சட்டத்தின் பிரகாரம் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். ஆகவே குறித்த காலப்பகுதிக்குள் செலவின விபரங்களை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் உறுப்பினர்களது விபரங்களை பொலிஸ்மா அதிபரிடம் இன்றைய தினம் ஒப்படைப்போம். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பொலிஸார் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். 


 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளின் பதவிக்காலம் 2025.06.02 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பதில்  சிக்கல் நிலை காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தமது உறுப்பினர் பெயர் பட்டியலை இதுவரையில் முழுமையாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடமோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடமோ சமர்ப்பிக்கவில்லை. அரைகுறையான நிலையில் வர்த்தமானி அறிவித்தலை பிரசுரிப்பது இயலாததொரு விடயமாகும்.



 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் உறுப்பினர் பட்டியல் தொடர்பான விபரங்களை 2025.05.30 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம். மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சு  பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 2025.06.02 ஆம் திகதியன்று 339 உள்ளுராட்சிமன்றங்களின் பதவி காலத்தையும் தொடர்வதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிடம் வலியுறுத்துகிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »