Our Feeds


Wednesday, May 28, 2025

SHAHNI RAMEES

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம்!


இலங்கை மின்சாரசபை மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான

யோசனையை முன்வைத்துள்ளது. மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நெக்ஸ்ட் ஆடை தொழிற்சாலையைப் போன்று இன்னும் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்படும்? பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை விடுத்து உள்ளுராட்சிமன்றங்களில் பலவந்தமாக ஆட்சியமைப்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  செவ்வாய்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,



நாட்டில் மீண்டும் பாரியதொரு மின் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று பல மாதங்களுக்கு முன்னரே நாம் தெரிவித்திருந்தோம்.


மின் சக்தி அமைச்சர் உட்பட முழு அரசாங்கமும் அதனை மறுத்தது. ஆனால் கடந்த வாரம் 18.3 சதவீதத்தினால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை மின்சாரசபையால் முன்வைக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நெக்ஸ் ஆடை தொழிற்சாலை மூடப்பட்டது. இந்நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் இதேபோன்று இன்னும் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்படும்?


விரைவில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த சவால்களுக்கு அரசாங்க தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. தற்போது சகல அமைச்சுக்களிலும் அரச சேவைகள் சீர்குலைந்துள்ளன.


எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு சார் ஊழியர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காமல் உள்ளுராட்சிமன்றங்களில் எவ்வாறு பலவந்தமாக ஆட்சியமைப்பது என்பதிலேயே அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.



அரசாங்கம் பெரும்பான்மையைப் பெற்றுள்ள சபைகளில் ஆட்சியமைப்பதில் நாம் எந்த இடையூறுகளையும் விளைவிக்கப் போவதில்லை. அதேபோன்று எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ள சபைகளில் ஆட்சியமைப்பதற்கு அரசாங்கம் எமக்கு இடமளிக்க வேண்டும்.


உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அவற்றை கலைப்பதற்கு ஜனாதிபதி எந்த உரிமையும், அதிகாரமும் கிடையாது.


நாட்டின் ஜனாதிபதியொருவர் எந்த சந்தர்ப்பத்திலும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே செயற்பட வேண்டும். ஆனால் தற்போதைய ஜனாதிபதி முற்று முழுதாக ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகளிலேயே ஈடுபடுகின்றார்.


யார் எதைக் கூறினாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் மேயருடன் கொழும்பில் நாம் ஆட்சியமைப்போம். நாம் எமது உறுப்பினர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பித்துவிட்டோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »