அநுர அரசும் ஏனைய அரசுகளைப் போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வினை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலை தான் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்தார்.
அத்துடன், மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு அதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கனடாவில் அமைக்கப்படுள்ள இனப்படுகொலை நினைவுத் தூபி தமிழ் மக்களுக்கான நீதிகோரலுக்கான உலகின் அங்கீகாரமாகும்.
இனப்படுகொலை என்ற செல்லை பயன்படுத்த கூடாது அவ்வாறு பயன்படுத்தினால் சட்டம் பாயும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கூறும் கருத்து எதேச்சதிகாரமிக்கது.
அத்துடன் முள்ளிவாய்க்கால் அழிவுகள் இராணுவத்தின் மீது வீண்பழி சுமத்தும் செயல் எனவும் முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியதை ஏற்க முடியாது.
அனுர அரசும் ஏனைய அரசு போன்றே தமிழ் மக்களின் கொலைகளுக்கு தீர்வை வழங்குவதில் இருந்து விலகிச் செல்கின்றது. யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவது என்பதும் இனப்படுகொலைதான்.
வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்று குவித்தார்கள். இவை எல்லாம் என்ன? இன அழிப்பில்லையா?
இது ஆதாரம் இல்லையா? மோசமான பொறிமுறைகளை கையாண்டு தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் இல்லாது செய்கின்றது. இதை நாம் ஏற்க முடியாது. இதற்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்றார்.