Our Feeds


Monday, June 30, 2025

Sri Lanka

கச்சதீவு இந்தியாவிடம் மீள கையளிக்கக்கப்பட மாட்டாது - அரசாங்கம்


இராஜதந்திர ரீதியிலும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்ச தீவு எக்காரணத்துக்காகவும் இந்தியாவிடம் மீள கையளிக்கக்கப்பட மாட்டாது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் ஏற்படுத்தும் அழிவினால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவில் தேர்தல் அண்மிக்கும் போது குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கைகளிலெடுக்கும் முதலாவது ஆயுதம் கச்சதீவாகும். கச்சதீவினை இலங்கைக்கு வழங்கியது தவறு என்றும், அதனை நாம் மீளப் பெற்றுக் கொள்வோம் என்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது வழமையான ஒன்றாகும்.

இது அவர்கள் தமது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் உத்தியாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரும் இவ்விடயம் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது தவறு என்றும், அந்த சந்தர்ப்பத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைளால் எமது மீன்வளம் மாத்திரமின்றி முழுக்கடல் வளமும் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். இந்த அழிவு தொடருமானால் வரும் 15 – 20 ஆண்டுகளில் இலங்கையின் கடல் பாலைவனமாகும் அபாயத்தை தவிர்க்க முடியாது. தமிழ்நாட்;டு அரசியல்வாதிகளின் சதித்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என ஜெய்ஷங்கரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

சர்வதேச சட்டத்துக்கமைய சட்ட ரீதியாக ஜனநாயகமான முறையிலேயே நாம் கச்சதீவினைப் பெற்றுக் கொண்டோம். எனவே அதனை மீண்டும் வேறு எவரும் கையகப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. நாம் இது குறித்து இந்திய மத்திய அரசாங்கத்திடமும், தமிழ்நாட்டு அரசாங்கத்திடமும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். எனவே இந்த பிரச்சினை தொடர்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.

(எம்.மனோசித்ரா)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »