ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு இனிமேல் ‘ஆனையிறவு உப்பு’ என்று அழைக்கப்படும். அதற்கு முதலில் சூட்டப்பட்ட ‘ரஜ லுணு’ என்ற பெயரை மாற்றி ‘ஆனையிறவு உப்பு’ என்ற பெயரை சூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா 27/2 இன் கீழ் கடந்த பாராளுமன்ற அமர்வின்போது முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் பெயர் ‘ரஜ லுணு’ (அரச உப்பு) என்று குறிப்பிடப்படுகிறது. முழு சந்தை கட்டமைப்பையும் கைப்பற்றுவதற்காகவே இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. அந்தவகையி லேயே ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கும் ‘ரஜ லுணு’ என்று பெயரிடப்பட்டது. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு பிரதிநிதிகளின் வலியுறுத்தலுக்கமைய ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை ‘ஆனையிறவு உப்பு’ என்று மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒருதரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங் களுக்காக ஒருதரப்பினரை தவறாக வழிநடத்தி யுள்ளார்கள். உப்பளத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பு தொழிற்சாலைக்கு அரசியல் பரிந்துரைகளுடன் நியமனங்கள் வழங்கப்படவில்லை. முறையான வழிமுறைகளுக்கமைவாகவே நியமனங்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே, அரசியல் தலையீடு உள்ளது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தால் உப்பு உற்பத்திக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொழிலாளர்களின் நலன்புரித் திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.