Our Feeds


Wednesday, June 4, 2025

SHAHNI RAMEES

ஐக்கிய மக்கள் சக்திக்கு சஜித் தலைவராக இருக்கும் வரை மு.கா ஆதரவை வழங்கும்! – ஹக்கீம் MP

 

சஜித்தின் தலைமை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்க்க வேண்டும். ஐக்கிய கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாக, அவர் அதன் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவை வழங்கும். என தேசிய  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

 

கண்டி மாவட்ட இணைப்புக்குழுவில் கலந்து கொண்ட பின் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 

சஜித் ரணில் இணைவதைத் தடுக்க இரு கட்சிகளிலும் குழுக்கள் செயல்பட்டு வருவதாக அறியவருகிறது. ரவி கருணாநாயக்க அறிவித்த இரண்டு முக்கிய நபர்களுக்கு மேலதிகமாக, அவர்களைச் சுற்றி ஒரு குழு இருப்பதாகவும், அவர்களில் ரவி கருணாநாயக்கவும் இருக்கலாம்.

 

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்பது எனது கருத்து. இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும். ஆகவே, அடுத்த தேர்தலுக்கு முன்பு இந்த இணைப்புக்கான தற்போதைய பிரச்சினையைத் தீர்ப்பது முக்கியமாகும்.

 

சஜித்தின் தலைமை தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை முதலில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்க்க வேண்டும். ஐக்கிய கூட்டணியில் ஒரு பங்காளிக் கட்சியாக, அவர் அதன் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவை வழங்கும்.

 

ஐக்கிய மக்கள் சக்தி, உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிலை நாட்டுவதில் சில சிரமங்களை எதிர்கொண்டுள்ள சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தியிற்கு எங்கள் ஆதரவை வழங்குவது குறித்து நாங்கள் முதன்மையாக பரிசீலித்து வருகிறோம்.

 

மேலும் இது உண்மையில் திருவுபடுத்திய வாக்குப்பதிவு முறையின் கீழ் பல உள்ளூராட்சி நிறுவனங்களில் எழுந்துள்ள ஒரு பிரச்சினையாகும். அத்தகைய சபைகளில் அதிகாரத்தை நிறுவுவதில் உள்ள சிக்கல்களைக் குறைக்க ஆளும் கட்சியின் பிராந்தியத் தலைவர்களுடன் கலந்தாலோசிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அதைத் தவிர, தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அரசின் தலைவர்களுடன் நாங்கள் இன்னும் எந்தவொரு கலந்துரையாடல்களையும் நடத்தவில்லை.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். எங்களிடம் அதிக உறுப்பினர்கள் உள்ள சபைகளில், சில நேரங்களில் அதிகாரத்தை நிலைநாட்ட ஆளும் கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள  வேண்டியிருக்கும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

எம்.ஏ. அமீனுல்லா


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »