பதுளை மாவட்டத்திலுள்ள 9 உள்ளூராட்சிமன்றங்களில் எம்மால் தனித்து ஆட்சியமைக்க முடியாத போதிலும், அவற்றில் 3 சபைகளில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கின்றோம். அதேபோன்று கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட ஏனைய உள்ளூராட்சிமன்றங்களிலும் நாமே ஆட்சியமைப்போம் என அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
பதுளையில் சனிக்கிழமை (14) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முறைமையில் சிக்கல்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும், அவற்றில் ஆட்சியமைப்பது சிரமமாகும்.
பதுளை மாவட்டத்திலுள்ள 18 உள்ளூராட்சிமன்றங்களில் 9 இல் நாம் தனித்து ஆட்சியமைத்துள்ளோம். ஆனால் எஞ்சியுள்ள 9 உள்ளுராட்சிமன்றங்களில் தனித்து ஆட்சியமைக்க முடியாது.
எமக்கு எதிராக ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து பயணிப்பதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எவ்வாறிருப்பினும் பண்டாரவளை, ஹல்துமுல்ல மற்றும் ஊவா பரணகம உள்ளிட்டவற்றில் வாக்கெடுப்பின் மூலம் நாம் ஆட்சியமைத்திருக்கின்றோம். அதேபோன்று எஞ்சிய கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட ஏனைய பெரும்பாலான சபைகளிலும் நாமே ஆட்சியமைப்போம்.
ஜனாதிபதியும் பாராளுமன்றமும் தேசிய மக்கள் சக்தியாக இருக்கும் போது உள்ளூராட்சிமன்றங்களும் தேசிய மக்கள் சக்தியாகவே இருக்க வேண்டும்.
அவ்வாறிருந்தால் மாத்திரமே மக்களுக்கான சேவைகளை இலகுவாக வழங்க முடியும். ஊழல், மோசடிகளுக்கு மேலதிக நிதியை வழங்குவதற்கு நாம் தயாராக இல்லை. தற்போது அரசியல் விளையாட்டுக்குள் முடிவுக்கு வந்துள்ளன என்றார்.