Our Feeds


Saturday, June 7, 2025

SHAHNI RAMEES

ஜனாதிபதிக்கே தெரியாமல் நிதி மோசடி குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு?



2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி

பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் கவனமெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


அரசியலமைப்பின் 34 (1) பிரிவின் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தெரிவுசெய்யப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் பரிசீலிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்படுகிறது. அதன்படி, ஜனாதிபதியின் அனுமதியுடன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும்.


எவ்வாறாயினும்,மேற்குறித்த சம்பவத்திற்கு அமைவாக 2025-05-06 திகதியிடப்பட்ட மற்றும் (06/01 යෝජිත/  ජ.පො.සමා/ 05-12/2025)  இலக்கத்தில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு கிடைக்க வேண்டியவர்களின் பெயர் பட்டியலில் 388 கைதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த்துடன், மேலும் அனுராதபுரம் சிறைச்சாலையில் நிதி மோசடி தொடர்பாக சிறையிடப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.



அதாவது, ஜனாதிபதியால் பொது மன்னிப்புக்காக அனுமதிக்கப்பட்ட 388 பெயர்களில் அந்த நபரின் பெயர் சேர்க்கப்படவில்லை.



இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் நேற்று வெள்ளிக்கிழமை (06) "ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகளை  விடுவிப்பது தொடர்பாக" என்ற தலைப்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் நாட்களில் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பான அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »