Our Feeds


Tuesday, July 29, 2025

Sri Lanka

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணைகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு - அருட்தந்தை சிறில் காமினி!


பாதுகாப்பு பிரதியமைச்சராக மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர பதவிவகிப்பது 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து முன்னெடுக்கப்படும்  விசாரணைகளின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பை  ஏற்படுத்தக்கூடும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் பொருத்தமான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் இராணுவ அதிகாரி பாதுகாப்பு பிரதியமைச்சராக பதவிவகிப்பது விசாரணைகளிற்கு பாதிப்பை  ஏற்படுத்தலாம் என கத்தோலிக்க திருச்சபையும் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு ஒரு பிரச்சினை இருப்பதாக நாங்களும் கருதுகின்றோம்,உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணைகளை அவரது அமைச்சு கையாளவில்லை,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் பொலிஸாரும் சிஐடியினருமே விசாரணைகளை கையாள்கின்றனர் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ ஆனால் அவர் பிரதியமைச்சராக பதவி வகிக்கின்றார் இதனால் விசாரரணைகள் பாதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டும்,உரிய தீர்மானத்தை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் பிரதியமைச்சராக பதவி வகிப்பதால் மக்கள் இயல்பாகவே விசாரணைகள் மீது அவர் செல்வாக்கு செலுத்தலாம் என கருதுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக விசாரணைகளின் நம்பகதன்மை குறித்த கேள்வி எழும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்தஞாயிறுதாக்குதலில் இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிற்கு தொடர்பிருப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதிபாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ கிழக்கு மாகாணத்தின் கட்டளை தளபதியாக பணியாற்றியவேளை ஜயசேகரவிற்கு இது குறித்து தெரிந்திருந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கிழக்கு மாகாண கட்டளைதளபதியாக அவருக்கு சில தகவல்கள் கிடைத்திருந்ததா?இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் அவர் சிஐடியினருக்கு வாக்குமூலம் தெரிவித்தது  எனக்கு நினைவில் இருக்கின்றது இதனை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்,விசாரணைகளிற்கு பின்னரே அவருக்கு தொடர்புள்ளதா இல்லையா என்பது தெரியவரும் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ  தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »