போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே, வடக்கில் இருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கிளிநொச்சி பளை பிரதேசத்திலுள்ள பிராந்திய தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், அங்கு உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்தார்.
இதன்போது, அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
" தென்னை பயிர்செய்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வடக்கில் இவ்வருடத்தில் 16 ஆயிரம் ஏக்கர் காணியில் தென்னை பயிர்செய்கை செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காணிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றது. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவே இப்படியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வறுமை ஒழிப்பு என்பது எமது கொள்கைகளின் பிரதான விடயமாகும். அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கில் அதிகளவு வறுமை உள்ளது. இந்நிலைமையில் இருந்து மீள வேண்டும். போரால் அனைத்தையும் இழந்துள்ள மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும்.
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வாழ்க்கையில் மாற்றம் இல்லை. வறுமையை ஒழிக்காமல் நாட்டின் அபிவிருத்தி பற்றி சிந்திக்க முடியாது.
தென்னை பயிர்செய்கையை சரியாக கையாண்டால் எதிர்காலத்தில் செழிப்பான பொருளாதாரம் இப்பகுதியில் மலரக்கூடும்." - என்றார்.
இந்த விஜயத்தின் போது, பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
