அரசியல் கலாச்சாரத்தை புறக்கணித்து விட்டு முன்னாள்
ஜனாதிபதிகளை பழிவாங்கும் நோக்கத்தில் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்காக் கொண்டு அவரை கொழும்பில் இருந்து வெளியேற்றி மெதமுல்லவுக்கு கொண்டு செல்வதற்காகவே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.மஹிந்தவை மெதமுல்லவுக்கு அனுப்பி வைக்கும் சட்டமூலம் என்று பெயர் வைத்திருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளராக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சு நேற்று வியாழக்கிழமை (31) 1896 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துச் சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரித்திருந்தது.முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைளை இரத்துச் செய்வதை இந்த சட்டமூலம் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.
நாட்டு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இந்த அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளமை கவலைக்குரியது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களுக்கு உரிய சிறப்புரிமைகளை வழங்குவது அரசியல் கலாச்சாரத்தின் ஒருபகுதியாகும்.உலக நாடுகளும் இந்த வழக்கினை பின்பற்றுகிறது.
அரசியல் கலாச்சாரத்தை புறக்கணித்து விட்டு முன்னாள் ஜனாதிபதிகளை பழிவாங்கும் நோக்கத்தில் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை கொண்டு வந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்காக் கொண்டு அவரை கொழும்பில் இருந்து வெளியேற்றி மெதமுல்லவுக்கு கொண்டு செல்வதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.மஹிந்தவை மெதமுல்லவுக்கு அனுப்பி வைக்கும் சட்டமூலம் என்று பெயர் வைத்திருக்கலாம்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டால் அது அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும்.ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்பட்டதால் தான் நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானது.இந்த அரசாங்கமும் அவ்வாறு செயற்பட்டால் பாரிய நெருக்கடிகளை ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
