Our Feeds


Saturday, October 25, 2025

Zameera

நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது - சஜித் பிரேமதாச


 (எம்.மனோசித்ரா)

நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டங்கள் எவையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானைத் தேர்தல் தொகுதியில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்களை வாழ வைப்பது தான் ஒரு அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இவ்வாண்டில் மாத்திரம் அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், உயிரிழப்புகளும் காயங்களுக்குள்ளான சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளன.

பொது மக்கள் சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதேசசபைத் தலைவர் ஒருவர் மீது அவரது அலுவலகத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் சாதாரண பிரஜைகளின் உயிருக்கு எவ்வாறு உத்தரவாதமளிக்க முடியும்?

இன்று சமூகத்தில் கொலைகளும் திட்டமிட்ட குற்றச் செயல்களும் வெகுவாகவும் சர்வசாதாரணமாகவும் இடம்பெற்று வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் சரியான வேலைத்திட்டமொன்று இல்லை. இந்த அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, கொலைகாரர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

தான் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வெலிகம பிரதேசசபைத் தலைவர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் பொலிஸ்மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் பொலிஸ்மா அதிபர் உட்பட பொலிஸார் அதற்குரிய எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இன்று நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், கொலைகாரர்களையும் கைது செய்து, குற்றச் செயல்களை இல்லாதொழிக்க வேண்டும். அற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

அவர்களுக்கு சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கும் நடவடிக்கைக்கு நாமும் எமது ஆதரவைத் தருவோம். இந்தக் கொலைக் கலாச்சாரத்தை முன்னிறுத்தி, எதிர்க்கட்சியை கட்டுப்படுத்த வந்தால், அதற்கு நாம் இடமளியோம். இன்று நாட்டில் ஜனநாயகமோ அமைதியோ இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. நாட்டை அழிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

நீதி, நியாயம், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கும் நாம் எமது உட்சபட்ச ஒத்துழைப்பத் தருவோம். மக்களுக்கு சேவையாற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான பாதுகாப்பை பெற்றுக் கொடுக்குமாறும், 220 இலட்சம் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »