Our Feeds


Wednesday, November 5, 2025

Zameera

மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே எமது ஒரே கோரிக்கை


 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடித்து மீண்டும் ராஜபக்ஸ குடும்பத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவோ, ரணில் விக்ரமசிங்கவை ஆட்சிக்குக் கொண்டுவரவோ எமக்குத் தேவையில்லை. எமது கோரிக்கை மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதே. இதுவே எமது ஒரே கோரிக்கை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். 


உகண்டாவில் ராஜபக்ஸ குடும்பத்தினர் கொள்ளையடித்த 18 பில்லியன் டொலர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒரு பகுதியை இந்நாட்டுக்குக் கொண்டுவந்தாலே பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளுக்கு நேற்று மாலை விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், மக்களுடனான சந்திப்புகளை மேற்கொண்டார். 

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சீலாமுனைப் பகுதியில் மாநகரசபை உறுப்பினர் நடராசா சுதர்ஷன் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில், மாநகரசபையின் பிரதி முதல்வர் டினேஸ் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். 

இதன்போது சீலாமுனை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன. மழைகாலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

மட்டக்களப்பு வாவியோரமாக மழைகாலங்களில் வெள்ளநீர் புகுவதால் சீலாமுனை கடுமையாகப் பாதிக்கப்படுவது தொடர்பிலும், வெள்ளநீர் புகாமல் தடுப்பதற்காக வெள்ளநீர்த் தடுப்பு அணைக்கட்டு ஒன்றைக் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நன்மை கருதி சனசமூக நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »