Our Feeds


Tuesday, November 4, 2025

SHAHNI RAMEES

போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்! - SLPP

 

நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை ஊக்குவித்துவிட்டு ஜனாதிபதி தற்போது மக்கள் மத்தியில் வீரனாகுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். போதைப்பொருள் ஒழிப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன  பெரமுனவின் காரியாலயத்தில்  திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாதாளக் குழுக்களை கைது செய்தல்,போதைப்பொருட்களை கைப்பற்றல் பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. போதைப்பொருள் ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். புதிய திட்டங்களும் அமுல்படுத்தியுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள்  முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.ஆனால் இந்த விடயத்தில் ஜனாதிபதியின் உண்மைத்தன்மை சந்தேகத்துக்கிடமாக உள்ளது.


சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றி இதுவரையில் உண்மை வெளிவரவில்லை. இலங்கைக்கு இரண்டு கொள்கலன்களில் ஐஸ் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச புலனாய்வு சேவை வழங்கிய புலனாய்வுத் தகவலையும் அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.

 நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை ஊக்குவித்துவிட்டு ஜனாதிபதி தற்போது மக்கள் மத்தியில் வீரனாகுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.கடந்த அரசாங்களும் போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை பிரபல்யப்படுத்தவில்லை.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே எதிர்வரும் 21 ஆம் திகதி பேரணியில் ஈடுபடவுள்ளோம். கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதற்கு இது தேர்தலல்ல என்பதை எதிர்கட்சிகளுக்கு குறிப்பிட்டுக்கொள்கிறோம்.ஜனநாயகத்தை பாதுகாக்க சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »