கண்டி, உடுதும்பர பகுதிக்கு 200 மி.மீ. இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படும் இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துத் தமது உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அந்நிறுவனத்தின் புவிச் சரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர, மழையுடனான வானிலை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியேறுவதற்கான மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்புற, மெததும்புற மற்றும் மினிப்பே ஆகிய பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நில்டண்டாஹின்ன மற்றும் மத்துரட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் இந்தச் சிவப்பு எச்சரிக்கை பொருந்தும்.
கடந்த நாட்களில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் மண்சரிவுக்கான முன்னெச்சரிக்கை அறிகுறிகள் தென்படுவதால், வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வெடிப்புகள் காணப்பட்டால் அந்த இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வசந்த சேனாதீர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்விடங்களில் மீண்டும் மண்சரிவு அல்லது மண் மேடுகள் சரிந்து விழும் அபாயம் இருப்பதால், அந்த இடங்களைத் தவிர்த்துத் தமது பாதுகாப்பை உறுதி செய்து உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மக்களுக்கு மேலும் அறிவித்துள்ளது.
