கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் ஒரு சில மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டமையானது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் வீழ்ச்சியாக கருத முடியாது எனவும், ஜனநாயக ரீதியாக மீண்டும் அதனை முன்வைத்து வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கொழும்பு மாநகர சபையின் அண்மைக்கால அரசியல் சூழல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:
கொழும்பு மாநகர சபையில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது அது மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும், ஒரு முறை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுவதால் மேயர் பதவியிலோ அல்லது சபையின் அதிகாரத்திலோ உடனடி மாற்றம் ஏற்படாது. உள்ளூராட்சி சட்டக்கோவையின்படி, மீண்டும் ஒருமுறை வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு இல்லையெனில் ஒரு வருட காலத்திற்கு சபையை கொண்டு நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. எனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுவது போல் அதிகார மாற்றம் குறித்து தற்போது பேச முடியாது.
கொழும்பு நகரில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளின் போது, அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் பாரபட்சமின்றி மக்களுக்காக பணியாற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இதனை வரவு செலவுத் திட்டத்திற்கான ஒரு இலஞ்சமாக நாம் கருதவில்லை. எமது நோக்கம் வரவு செலவுத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றுவதல்ல, மாறாக இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு சேவை செய்வதாகும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழங்கிய வாக்குறுதிகளை மீறி வாக்களித்திருக்கலாம், அது அவர்களின் மனசாட்சி சார்ந்த விடயமாகும்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் பல்வேறு சபைகளில் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் போது மாறுபட்ட அரசியல் சூழல்கள் காணப்பட்டன. சில இடங்களில் நாம் வெற்றி பெற்றோம், சில இடங்களில் பின்னடைவைச் சந்தித்தோம். இது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) மாத்திரம் உரிய நிலைமையல்ல, ஏனைய பிரதான கட்சிகளும் சில சபைகளில் தோல்விகளைச் சந்தித்துள்ளன. அரசியல் ரீதியாக சில இணைவுகள் தற்காலிகமானவை. எனினும், அடுத்த முறை வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கும் போது, கொழும்பு மாநகர சபையின் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளில் நிலவும் தேவையற்ற செலவுகள் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான சில நிர்வாகச் சிக்கல்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கவும், வினைத்திறனான உள்ளூராட்சி நிர்வாகத்தை உருவாக்கவும் தேவையான சீர்திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டினார்.
