ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கும்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அகிலவிராஜ் காரியவசம், ருவான் விஜேவர்தன மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாச மாத்திரமே பங்கேற்றிருந்தார்.இச்சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர், 'எமது தாய்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேசிய இலக்குகளை பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நிறைவேற்ற புதுமையான கொள்கை நடவடிக்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள மற்றும் நேர்மறையான கலந்துரையாடல்கள் நடைபெற்றன' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர இந்த சந்திப்பில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிப்பது என்ற காரணிக்கு அப்பால் அனைத்து கட்சிகளும் ஐக்கிய மக்கள் கூட்டணியாக பயணத்தை தொடர்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஒவ்வொரு கட்சிகளதும் தனித்துவத்தன்மை பாதுகாக்கப்படும் என்ற காரணி வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இக்கட்சிகளின் இணைவுக்கு தான் தலைமைத்துவப்பதவி வகிப்பது தடையாக இருக்குமெனில், அதனை துறக்க தயாராக இருப்பதாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் அந்த விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமை குறித்து சஜித் சுட்க்காட்டியுள்ளார். அது மாத்திரமின்றி கடந்த ஐ.தே.க. சம்மேளனத்தில் கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்க ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அந்த தீர்மானத்தை மாற்றுவதாயின் ஐ.தே.க. கட்சி யாப்பிற்கமைய மீண்டுமொரு விசேட சம்மேளனத்தைக் கூட்டி அதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட்டு தன்னுடன் பயணித்த ஷெஹான் சேமசிங்க, பிரமித பண்டார தென்னகோன் மற்றும் காஞ்சன விஜேசேகர உள்ளிட்டோரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது ரணிலின் கோரிக்கையாகவுள்ளது.
எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் அதனை விரும்பவில்லை. அவ்வாறு அவர்கள் இணைத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் தொகுதி அமைப்பாளர் நியமனம் உள்ளிட்ட கீழ் மட்ட அரசியலில் கூட அது தாக்கம் செலுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றமை தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ஜனவரிக்குள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாசவுக்கிடையில் ஜனவரிக்குள் பிரத்தியேக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்வது குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜனவரியில் ரணில் - சஜித் நேரடி சந்திப்பின் பின்னர் இந்த இணைவு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நேற்றைய சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, தவிசாளர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும் சஜித்தை தவிர வேறு சிரேஷ'ட உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
