அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் அதிருப்தி வெளியிட்டிருக்கும் மக்கள் போராட்ட முன்னணியினர், பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படுவதுடன் அதனைப் பதிலீடு செய்வதற்காகப் புதிய சட்டம் கொண்டுவரப்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் போராட்ட இயக்கத்தின் சார்பில் சட்டத்தரணி நுவன் போபகே, ராஜ்குமார் ரஜீவ்காந்த், அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (30) கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவையும் அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேனவையும் சந்தித்து, அரசாங்கத்தின் புதிய முன்மாழிவு தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஜீவ்காந்த், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்ததாகவும், இருப்பினும் தற்போது அதனை விடவும் மோசமான சரத்துக்களைக்கொண்ட புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு ஆயத்தமாகியிருப்பதாகவும் விசனம் வெளியிட்டார்.
அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் ஏற்கனவே பலர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் இப்புதிய சட்டம் கொண்டுவரப்படவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
