ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சியோ, உட்கட்டமைப்பு மேம்பாடோ மட்டுமல்லாமல் இன, மத, மொழி வேறுபாடுகளைத் தாண்டி மனிதர்களுக்கிடையே நம்பிக்கையும், சமத்துவமும், பரஸ்பர மரியாதையும் நிலைநிறுத்தப்படும்போதுதான் ஒரு நாடு உண்மையான சுதந்திரத்தையும் நிலையான சமாதானத்தையும் அடைகிறது. அந்த வகையில், இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்தி வரும் அக்கறை, இலங்கையின் எதிர்காலத்திற்கு நம்பிக்கையூட்டும் அடையாளமாகத் திகழ்ந்துவருகிறது.
நிலையான சமாதானம் இல்லாமல் உண்மையான சுதந்திரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பது கடந்த கால அனுபவங்களால் உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும். இனவாத அரசியல் நாட்டை பலமுறை பின்னடைவை நோக்கி இட்டுச் சென்ற நிலையில், அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவதே தேசிய முன்னேற்றத்தின் அடித்தளம் என்ற தெளிவான கொள்கையுடன் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களதும், பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களதும் தலைமையில், இனவாதமற்ற அரசியல் அணுகுமுறை அரசின் முக்கிய அடையாளமாக மாறியுள்ளது.
அனைத்து மக்களுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு என்பதே அரசின் அடிப்படை நோக்கமாக விளங்குகிறது. எந்த இனத்திற்கும், மதத்திற்கும் விசேட சலுகை வழங்கும் அரசியல் அல்லாமல் அனைவரையும் சமமாகக் கருதி, மனிதநேயத்தின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இது தேசிய சமத்துவத்தை கட்டியெழுப்பும் முக்கியமான முன்னேற்றமாக காணப்படுகிகிறது.
அண்மையில் நாட்டை தாக்கிய தித்வா புயல், பல மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வீடுகள், வாழ்வாதாரங்கள், உட்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் இன, மத, மொழி வேறுபாடுகளின்றி நியாயமான முறையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். பாதிக்கப்பட்டவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அல்லாமல் பாதிப்பின் அளவையே அடிப்படையாகக் கொண்டு நிவாரணம் வழங்கப்பட்டமை, இன நல்லிணக்கத்தை நடைமுறையில் அரசு செயல்படுத்தி வருவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்த அணுகுமுறை, அரசின் மீது மக்களிடையே நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
மேலும், அரசாங்க நியமனங்கள் தொடர்பிலும் கடந்த காலங்களில் நிலவிய இன, அரசியல் சார்ந்த குற்றச்சாட்டுகளைத் தாண்டி, தகுதி, அனுபவம், திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன அடையாளம் அல்லாமல் தனிநபரின் ஆற்றலே முன்னுரிமை பெறும் இந்த நிர்வாக நடைமுறை, அரசியல் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், நியாயத்தையும் உறுதி செய்கிறது. இது இனங்களுக்கு இடையிலான சந்தேகங்களை குறைத்து, ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், “நாடு அனைவருக்கும் சொந்தமானது” என்ற தத்துவத்தை அரசியல் முழக்கமாக மட்டுமல்லாது, செயற்பாடுகளாகவும் மாற்றிக் காட்டி வருகிறார். அதேபோன்று, சமூக நீதி, கல்வி, மனித உரிமைகள் ஆகிய துறைகளில் பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் அர்ப்பணிப்பு, சமூக இடைவெளிகளை குறைத்து, இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.
இன நல்லிணக்கம் நிலைநிறுத்தப்படும்போது, உண்மையான சுதந்திரம் உறுதியாகும். அதனூடாக ஒரு சிறப்பான நாட்டை உருவாக்கவும், வளமானதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் முடியும். இந்த இலக்கை அடைவதற்கு அரசாங்கத்தின் முயற்சிகள் மட்டுமன்றி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இன, மத வேறுபாடுகளை மறந்து, ஒற்றுமையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
இனவாதமற்ற, மனிதநேயத்தை மையமாகக் கொண்ட அரசின் தற்போதைய செயற்பாடுகள், எதிர்கால இலங்கைக்கான நம்பிக்கையூட்டும் பாதையை உருவாக்கி வருகின்றன. இன நல்லிணக்கம், தேசிய சமத்துவம், நிலையான சமாதானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்த அரசியல் அணுகுமுறை, உண்மையான சுதந்திரத்தை நிலைநிறுத்தும் ஒரு முக்கியமான அடித்தளமாக விளங்கிவருகிறது.
