Our Feeds


Saturday, February 21, 2026

Zameera

அமெரிக்க கடற்படை தளபதி – பாதுகாப்பு பிரதியமைச்சர் சந்திப்பு


  அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. "வெப்" கோலர் , பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துள்ளார்.



இதன்போது, இலங்கை மற்றும் அமெரிக்கா எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அவசர அனர்த்தங்களில் பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான வாய்ப்புகள், அத்துடன் கடல்சார் கள விழிப்புணர்வை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.



இலங்கையின் பாதுகாப்புப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும், குறிப்பாக இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதற்கும், அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' இயற்கை அனர்த்தத்தின் போது அமெரிக்கா வழங்கிய அவசர மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவிற்கும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் இதன்போது அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.



சட்டவிரோதக் கடத்தல் உள்ளிட்ட எல்லை தாண்டிய குற்றங்கள் மற்றும் ஏனைய நவீன சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கான பொதுவான அர்ப்பணிப்பு இந்தக் கலந்துரையாடல்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது. இது தொடர்பில் பரந்தளவிலான விழிப்புணர்வைப் பெறுவதற்காக மேம்பட்ட தொழில்நுட்ப முறைகள் மற்றும் இணைந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்தும் இதன்போது பிரதானமாகக் கவனம் செலுத்தப்பட்டது.



இலங்கையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க கரையோரக் காவல்படைக் கப்பல் ஒன்றை வழங்குவதன் மூலம், இலங்கையின் கடற்பரப்பிற்குள் உள்ள பாதுகாப்புச் சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கு இலங்கை கடற்படைக்கு அதிக பங்களிப்பை வழங்கும் ஒரு முக்கிய படியாக இது அடையாளங் காணப்பட்டது.



இரு தரப்பினருக்கும் இடையில் தற்போதுள்ள பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு, அத்துடன் கூட்டுப் பயிற்சிகள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் ஒருங்கிணைப்பை மேம்படுத்தக்கூடிய வழிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய பொதுவான நோக்கங்களுக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அட்மிரல் கோலர் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »