சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பெண்களின் உரிமையை ஒரே ஒரு நாளில் மட்டும் கொண்டாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், 24 மணி நேரமும் வருடத்தின் 365 நாட்களும் பெண்களின் உரிமைகளை வெற்றிகொள்ளும் நாடாக நமது நாட்டை மாற்றுவதற்கு நாமானைவரும் அர்ப்பணிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மகளிர் சக்தியும் இணைந்து 'தேசத்தைக் கட்டியெழுப்பும், அவளைப் பாதுகாப்போம் - ஐக்கிய மகளிர் தினம்' எனும் கருப்பொருளில் ஞாயிற்றுக்கிழமை (8) கொழும்பு தாமரைத் தடாக அரங்கு வளாகத்தில் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'ஜன நள லிய' திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக்க் கல்வியில் ஈடுபடும் மாணவிகளுக்குப் பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டமொன்றை இன்றிலிருந்து ஆரம்பிக்கிறோம். பெண்கள் நலன், பெண்களை மையப்படுத்திய அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை நாடு முழுவதும் உள்ள 14,008 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 50,967 கிராமங்களிலும் எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்த கீழ் மட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் தேசிய செயற்திட்டத்தை முன்னெடுப்போம். பெண்களின் உரிமைகளோடு வீட்டிலும் பணியிடத்திலும் பொது இடங்களிலும் வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு பாதுகாப்பும் அரணும் வழங்குவதோடு, பெண்களின் உரிமையுடன் இணைந்த குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாக்கும் பயணத்தையும் நாம் முன்னெடுப்போம்.
தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்தின்மை இன்று தீவிரமாகி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளில் நாம் நான்கு மாபெரும் சோகங்களை எதிர்கொண்டோம். இந்த நான்கு சோகங்களால் நாட்டில் வறுமை அதிகரித்து, வருமான வழிகள் இல்லாமல் போய், வாழ்வாதாரம் சீர்குலைந்து, இல்லத்தரசியின் உரிமைகள் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலை காணப்படுகின்றன. இன்று மத்திய கிழக்கிலிருந்து வியாபித்து வரும் போர்ச்சூழலை நாம் எதிர்கொள்கிறோம். இந்த போர்ச்சூழல் காரணமாக பல சவால்கள் உருவாகி, பொருளாதார அபிவிருத்தி, வாழ்வாதாரம் மற்றும் குடும்ப வருமானம் குறைவதால் பாதிக்கப்படுவது வீட்டின் தெய்வமான தாய்மார்களே.
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களே மிகுந்த பொறுப்புணர்வுடன் பிள்ளைகளை வளர்த்து, குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக கிடைக்கும் பணத்தை சேமித்து குடும்பத்தை வலுப்படுத்த முதலீடு செய்து முக்கியமான பணியை ஆற்றுகின்றனர். இந்த போர்ச் சூழலில் வறுமை அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது. வாழ்வாதாரமே இல்லாமல் போகும் அபாயமும் காணப்படுகின்றது. அதோடு பொருட்களின் விலைகள் அதிகரித்து வாழ்க்கைச் சுமை அதிகரிக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டு தாய்மார்கள் உள்ளிட்ட பெண்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த தருணத்தில் நாம் உண்மையான யதார்த்தத்தை புரிந்துகொண்டு, அறிவை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். கனவு உலகிலிருந்து விடுபட்டு வதந்திகளுக்கு செவிசாயாமல், பொய்யான ஆர்ப்பாட்ட நாடகங்களில் இன்பம் காண்பதற்கு பதிலாக நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் முன்பாக, நாட்டுக்கு முன்பாக, மக்களுக்கு முன்பாக உருவாகும் பிரச்சினைகளை நோக்கிப் பார்க்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். கல்வியறிவின்மையை ஒழிக்க தெளிவான வேலைத்திட்டமொன்று எமக்கு அவசியமாகவுள்ளது. அதில் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதும், பிரபஞ்சம் திட்டத்தின் மூலம் டிஜிட்டல் யுகத்திற்கேற்ற டிஜிட்டல் கல்வியறிவை பெண் குழந்தைகளுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். புதிய அறிவை பெற்றுக் கொடுக்கும் திட்டங்களையும் இனிவரும் காலங்களில் முன்னெடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
நுண்கடன் வலையில் சிக்கி கடன் சுமையால் அழுத்தத்திற்கும் தொல்லைக்கும் உள்ளாகியிருக்கும் பெண்களை மீட்பதற்கு தெளிவான திட்டமொன்று நாட்டுக்கு அவசியமாக காணப்படுகின்றன. நுண் கடன் வலையில் சிக்கி நசுக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க இலவச சட்ட உதவித் திட்டங்களை ஆரம்பித்து, சட்ட ரீதியாக பெண்களுக்காக குரல் கொடுத்து, பெண்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்த நாம் முன்நிற்ப்போம்.
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மகளிர் சக்தியும் உண்மையை பேச பயப்படாத ஒரு அரசியல் இயக்கமாகும். யதார்த்தத்தை விளக்கி விருப்பு வெறுப்புகளை பற்றி அஞ்சாமல் சமூகத்தில் உண்மையை உண்மையாக பேசும் அரசியல் இயக்கமாகும். முன்பு மாதவிடாய் வறுமை தொடர்பில் நாம் பேசியபோது எமக்கு சேறு பூசியவர்கள், இப்போது அந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு இந்த மாதவிடாய் வறுமையை ஒழித்து பெண்களின் சுகாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேசியக் கொள்கையை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். உண்மையை பேசியதால்தான் ஐக்கிய மக்கள் சக்தி இத்தகைய வெற்றியை அடைந்தது.
மாதவிடாய் வறுமையை ஒழிக்க சிறிய மட்டத்தில் பாடசாலைகளை மையமாகக் கொண்டு இத்திட்டங்களை ஆரம்பித்தாலும், நாடு முழுவதும் உள்ள பெண்களை ஒன்றிணைத்து அனைவருக்கும் இலவசமாக இந்த பக்க பலத்தைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக இனிவரும் காலங்களிலும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்புவேன் என்றார்.
