(இராஜதுரை ஹஷான்)
மக்கள் நம்பிக்கை கொள்ளும் அரசாங்கம் ஒன்று இலங்கையில் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. இலங்கைக்கு பல்வேறு இடங்களுக்கு சென்றிருந்த போது மக்கள், நாட்டுக்கு உதவி செய்யுங்கள் என்று தான் என்னிடம் கேட்டார்கள். அது அவர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியது என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்தார்.
தாய்லாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதற்காக மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
தொழில்நுட்பம் தற்போது முன்னேற்றமடைந்துள்ள நிலையில் அதன் பயன் ஒருதரப்பினருக்கு மாத்திரம் கிடைக்க கூடாது. புதிய தொழில்நுட்பத்தின் உச்சபயன் ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைக்க்பெற வேண்டும்.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது இடம்பெற்றதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.
நான் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த போது விமான பணிப்பெண் என் அருகில் வந்து 'நீங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தானே, எமது நாட்டுக்கு உதவி செய்ததற்கு மிக்க நன்றி, தயவு செய்து இந்த அரசாங்கத்துக்கு உதவி செய்யுங்கள்| என்று என்னிடம் தெரிவித்தார்.
அந்த பெண் சிறந்தவர் என்பதுடன், அவர் ஊழல் மோசடிக்கு எதிரானவர் என்று எனக்கு தோண்றியது. இலங்கைக்கு பல்வேறு இடங்களுக்கு சென்றிருந்த போது மக்கள் நாட்டுக்கு உதவி செய்யுங்கள் என்று தான் என்னிடம் கேட்டார்கள். அது அவர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியது என்றார்.
இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிடுகையில்,
பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்சிப்பெறுவதற்கு ஆரம்பக்கட்டமாக கடினமான தீர்மானங்களை எடுத்தோம். நீண்டகால சிறந்த திட்டங்களையும், மீட்சியையும் அடிப்படையாகக் கொண்டு அந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். தோற்றம் பெற்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட வேண்டும் என்ன எண்ணப்பாடும் மக்கள் மத்தியில் காணப்பட்டது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைப்பாடு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பலமுறை சாதகமான நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தியுள்ளார்.இது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி முகாமைத்துவத்தின் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவது எமது பிரதான இலக்காக காணப்படுகிறது. பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை வலுவான வகையில் அமுல்படுத்த வேண்டும் என்பதை நாடு என்ற அடிப்படையில் நெருக்கடியான நிலையில் விளங்கிக் கொண்டோம் என்றார்.
