நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், எரிபொருள் விநியோகம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால் மின்சாரத் தடையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டார். அத்துடன், வரும் நாட்களில் மேலும் பல எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் மாத நடுப்பகுதி வரை டீசல் விநியோகத்தை எவ்வித சிக்கலுமின்றி முன்னெடுக்க முடியும் என்றும், 92 மற்றும் 95 ரக பெற்றோல் விநியோகம் ஜூன் மாத ஆரம்பம் வரை பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா:
"தற்போது இரண்டு கப்பல்கள் தரையிறக்கப்படுகின்றன. 27ஆம் திகதி வந்த கப்பலில் 30,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலும், 5,000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலும் கொண்டுவரப்பட்டுள்ளன. நாளை வரும் IOC கப்பலில் தலா 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 92 ரக பெற்றோல் வருகின்றன. 28, 29ஆம் திகதிகளில் வரவிருந்த 37,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் முன்னதாகவே வந்து தற்போது தரையிறக்கி முடிக்கப்பட்டுள்ளது.
எமக்கு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான எண்ணெய் பெறுவதில்தான் சிக்கல் இருந்தது. சுத்திகரிப்பு நிலையத்திலிருந்தே எமக்குத் தேவையான அதிகப்படியான டீசல் மற்றும் எரி எண்ணெய் தயாரிக்கப்படுகின்றன. எரி எண்ணெய் கிடைக்காவிடில் மின்சாரத் தடைக்குச் செல்ல வேண்டி வரும் என்பதால், அதற்கான ஏலங்களைக் கோரியுள்ளோம். அதன்படி, ஏப்ரல் 2 மற்றும் 4ஆம் திகதிகளுக்கு இடையில் 32,000 மெட்ரிக் தொன் டீசலும், 8,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளும் வரவுள்ளன.
அதனைத் தொடர்ந்து 6 மற்றும் 7ஆம் திகதிகளில் 37,500 மெட்ரிக் தொன் டீசலும், 7 மற்றும் 8ஆம் திகதிகளில் 32,000 மெட்ரிக் தொன் டீசலும் 5,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் வரவுள்ளன. 10, 11ஆம் திகதிகளில் 30,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளும், 18, 19ஆம் திகதிகளில் சினோபெக் நிறுவனத்தின் கப்பல் மூலம் தலா 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 92 ரக பெற்றோலும் வரவுள்ளன.
மின்சார உற்பத்திக்காக 12, 13ஆம் திகதிகளில் 30,000 மெட்ரிக் தொன் எரி எண்ணெய் அடங்கிய கப்பலும், 16, 17ஆம் திகதிகளில் 35,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலும் வரவுள்ளன. மீண்டுமொரு கப்பல் 21, 22ஆம் திகதிகளில் 20,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலுடன் வரவுள்ளது. 24, 25ஆம் திகதிகளில் 37,000 மெட்ரிக் தொன் டீசலும், 29, 30ஆம் திகதிகளில் 30,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலும் 5,000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலும் வரவுள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான இந்த எரிபொருள் கப்பல்கள் அனைத்தும் எமக்குக் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. முக்கியமாக இவை எதுவும் போர் நடைபெறும் பிராந்தியங்களிலிருந்து ஏற்றப்படுபவை அல்ல."
