Our Feeds


Sunday, March 8, 2026

Zameera

ஈரான் கப்பலில் இருந்தவர்களை பாதுகாத்து ஜனாதிபதி சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நெருக்கடியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளார்


 (இராஜதுரை ஹஷான்)


ஈரான் கப்பலில் இருந்தவர்களை பாதுகாத்து ஜனாதிபதி சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நெருக்கடியை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளார். ஜனாதிபதியின் செயற்பாடு வரவேற்கத்தக்கது. தற்போதைய நெருக்கடியை அரசியல் இலாபத்துக்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது ஏனெனில் நிலைமை பாரதூரமானது.பதவிக்கு ஏற்றாட்போல் எதிர்க்கட்சித் தலைவர் நடந்துக்கொள்ள வேண்டும் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


கொழும்பில் உள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


உலக அரசியல் தற்போது பற்றி எரிகிறது.போர் குற்றவாளிகளான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் ஒன்றிணைந்து இன்று முழு உலகின் அமைதிக்கு எதிராக செயற்படுகிறார்கள்.


இந்தியாவில் இராணுவ பயிற்சிக்காக சென்ற ஈரான் கப்பல் மீது தான் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.இது அமெரிக்காவின் கோழைத்தனமான செயற்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த கப்பல் தாக்குதல் விடயத்தில் இந்தியாவின் மீதும் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மட்டத்தில் முன்வைக்கப்படுகிறது.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்தார்.இலங்கையில் இராணுவ படைகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால் இலங்கை இன்று போர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்க வேண்டும்


ஈரான் கப்பல் விவகாரத்தை ஜனாதிபதி சர்வதேச சட்டத்தின் பிரகாரம் முறையாக முகாமைத்துவம் செய்துள்ளார். இந்த விடயத்தில் நாடு என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்க கூடாது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஏற்றாட்போல் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »