Our Feeds


Wednesday, April 29, 2026

SHAHNI RAMEES

மீண்டும் கரண்ட் பில் கூடுமா? குறையுமா? : மே 09 இல் இறுதித் தீர்மானம்!

 

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த தீர்மானம் வரும் மே மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பான பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.


உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையால், 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின் உற்பத்தியுடன் தொடர்புடைய திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை  தேசிய முறைமை செயல்பாட்டாளர் தனியார் நிறுவனம் (National System Operator (Pvt) Ltd), கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காகச் சமர்ப்பித்திருந்தது.


இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டணத் திருத்தம் குறித்து பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெற ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டணத் திருத்த ஆவணத்தில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன:


மே 10 ஆம் திகதி முதல் மின்சார நுகர்வோருக்கு 15 பில்லியன் ரூபா அரச மானியத்தை வழங்குதல்.


வீட்டு பாவனை மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட 95 வீதமான நுகர்வோருக்கு அரச மானியத்தின் ஊடாகக் கட்டணங்களை அதிகரிக்காதிருக்கப் பரிந்துரைத்தல்.


பொதுத் தேவை, அரச நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் ஆகிய பிரிவுகளில் மாதத்திற்கு 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்துவோருக்குக் கட்டணத்தை அதிகரிக்காதிருக்கப் பரிந்துரைத்தல்.


கைத்தொழில் துறையின் முதலாவது துணைப் பிரிவினருக்கும் கட்டணத்தை அதிகரிக்காதிருக்கப் பரிந்துரைத்தல்.


நிலக்கரி நிலைமை காரணமாக ஏற்படும் மேலதிக செலவுகளை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்காதிருப்பதை மேலும் உறுதிப்படுத்துதல்.


2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் மின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் நிறுவனத்திற்கு 38 பில்லியன் ரூபா நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளது. இதில் நிலக்கரி தொடர்பான மேலதிக செலவுகள் உள்ளடக்கப்படவில்லை. இந்த மொத்தப் பற்றாக்குறையில் 15 பில்லியன் ரூபாவை மானியமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் திறைசேரி ஏற்கனவே ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.


கட்டணத் திருத்தம் தொடர்பான ஆவணங்கள் இன்று (29) வெளியிடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள தரப்பினர் இது குறித்த தமது எழுத்துமூல கருத்துக்களை மே 06 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம். வாய்மூல கருத்துத் தெரிவிப்பதற்கான அமர்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.


கருத்துக்களைத் தபால், மின்னஞ்சல், வட்ஸ்எப்  அல்லது தொலை நகல் மூலம் அனுப்பலாம். வாய்மூலக் கருத்துத் தெரிவிப்பிற்கு முன்கூட்டியே பதிவு செய்தல் அவசியமாகும் (தொலைபேசி: 076 427 1030).


பெறப்படும் கருத்துக்களைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டணம் குறித்த இறுதித் தீர்மானம் 2026 மே 09 ஆம் திகதி அறிவிக்கப்படும்.


கருத்துக்களைச் சமர்ப்பிக்க வேண்டிய விபரங்கள்:


தபால் மூலம்: 2026 விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது ஆலோசனைகள், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6 ஆவது மாடி, இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், புனித மைக்கல் வீதி, கொழும்பு 03.

 

மின்னஞ்சல்: consultation@pucsl.gov.lk

தொலை நகல் : 0112392641

வட்ஸ்எப்: 0764271030

 

மேலதிக விபரங்களுக்கு: ஜயநாத் ஹேரத் (இயக்குநர் - நிறுவன தொடர்பாடல் பிரிவு) - 077 294 3193.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »