Our Feeds


Wednesday, April 22, 2026

SHAHNI RAMEES

ஹார்முஸ் ஜலசந்தியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல் உள்ளிட்ட இரண்டு கப்பல்களை சிறைபிடித்த ஈரான்!

 




ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும்போது

கடல்சார் விதிகளை மீறியதாகக் கூறி, இரண்டு கப்பல்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஈரான் கடல் எல்லைக்குள் கொண்டு சென்றுள்ளதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) புதன்கிழமை அறிவித்தது.


இவ்வாறு ஈரானால் சிறைபிடிக்கப்பட்டவை ‘MSC-Francesca’ மற்றும் ‘Epaminondas’ ஆகிய இரண்டு கப்பல்களாகும். இதில் ‘MSC-Francesca’ கப்பல் இஸ்ரேலிய நிர்வாகத்துடன் தொடர்புடையது என்று ஈரான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.


உரிமம் இன்றி செயல்படுதல், கடல்சார் அமைப்புகளைத் தவறாக மாற்றுதல் (Tampering) மற்றும் இரகசியமாக ஜலசந்தியை விட்டு வெளியேற முயற்சிப்பதன் மூலம் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


“எமது புலனாய்வுப் பிரிவினர் இந்தக் கப்பல்களை அடையாளம் கண்டனர். ஈரான் தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவற்றை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது,” என்று புரட்சிகர பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தற்போது ஈரானிய கடல் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இந்தக் கப்பல்களில் உள்ள பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட உள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி போன்ற மூலோபாய கடல் பாதையின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் அல்லது ஈரான் விதித்துள்ள சட்டங்களை மீறும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரானிய கடற்படை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


அமெரிக்க கடற்படை ஈரானிய எண்ணெய் கப்பல்களை சோதனையிடுவதற்குப் பதிலடியாகவே ஈரான் இவ்வாறு செயல்படுவதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »