பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக முன்வைத்த சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் தான் நீதிமன்றம் சென்றார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக குறிப்பிட்டவர்கள், அந்த சட்டத்தை காட்டிலும் பாரதூரமான சட்டவரைவையே சமர்ப்பித்துள்ளது என முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொரளை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாத தடைசட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாடு 2015 ஆம் ஆண்டு உறுதியாக காணப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெறும் வரை நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி எவரையும் கைது செய்யவில்லை.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக பிறிதொரு சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நாங்கள் வெளிப்படையான நடவடிக்கைகளையே மேற்கொண்டோம். அரசியல் கட்சி பிரதிநிதிகள், ஊடக பிரதிநிதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், சிவில் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டோம்.
மக்கள் விடுதலை முன்னணியினர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்று அந்த நடவடிக்கைகளையும் நெருக்கடிக்குள்ளாக்கினார்கள். இவ்வாறான பின்னணியில் தான் 2024 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவை தயாரித்துள்ளது.இந்த சட்டவரைவு நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமானது.
இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யாது. மாறாக அந்த சட்டத்தை கொண்டு கைதுகளை மாத்திரமே முன்னெடுக்கிறது. இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடு என்றார்.
