Our Feeds


Friday, April 17, 2026

Zameera

அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது : சாகர காரியவசம் குற்றச்சாட்டு


 (இணையத்தள செய்திப் பிரிவு )


நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலை உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.


பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அனைத்து இலங்கை மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படைத் தூணான தனிமனித சுதந்திரம் மற்றும் பிரஜைகளின் உரிமைகள் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்


அவர் மேலும் தெரிவிக்கையில், 


தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, நீதித்துறை மற்றும் சிறைச்சாலைத் துறை போன்ற நிறுவனங்கள் காணப்படுகின்ற போதிலும், இன்று அவை அரசாங்கத்தினால் மிக மோசமான முறையில் கையாளப்படுகின்றன. 


குறிப்பாக, பொலிஸ் மா அதிபர் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்க செயற்படுவதாகவும், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஓய்வுபெற்ற மற்றும் ஆளுங்கட்சியின் அரசியல் மேடைகளில் இருந்த ஒரு அதிகாரியின் கீழ் கொண்டுவரப்பட்டு எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 



அதேபோன்று, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அவர் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்வதற்காக சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 


சிறைச்சாலைத் துறையிலும் அரசாங்கம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவித்த சாகர காரியவசம், எவ்வித அரசியல் சார்புமின்றி நேர்மையாகச் செயற்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய சட்டவிரோதமான முறையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. 


இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனித உரிமை வழக்கின் மூலம், அரசாங்கத்தின் நடவடிக்கை தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்பது உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். நீதி அமைச்சின் செயலாளராக அரசாங்கத்திற்கு நெருக்கமானவர் நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிட முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல். 


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்ட விவகாரமானது தெளிவான அரசியல் பழிவாங்கல் எனத் தெரிவித்த சாகர காரியவசம், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஒருவரை அரசாங்கம் இன்று தவறாகச் சித்தரிக்கிறது. 


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கர்தினால் அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக அரசாங்கத் தரப்பினர் மேடைகளிலும் நாடாளுமன்றத்திலும் கூறினாலும், நீதிமன்ற அறிக்கைகளின்படி அவருக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. 

19 வருடங்களுக்கு முந்தைய சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் தற்போது கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டத்தை அவமதிக்கும் செயல். எனவே, நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நேசிக்கும் மக்கள், கட்சி பேதங்களைக் கடந்து அரசாங்கத்தின் இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை அவதானிக்க வேண்டும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »