ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் சமர்ப்பித்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.Travel Guides & Travelogues
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான பிரதம பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமார மற்றும் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆகியோரின் வாதங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம மனு நிராகரிப்பை அறிவித்தார்.
இதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றின் அபிவிருத்தித் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு அதன் உரிமையாளருக்குச் சாதகமான முறையில் செயற்பட்டதன் மூலம் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
