Our Feeds


Monday, April 27, 2026

SHAHNI RAMEES

வில்பத்து காடழிப்பு தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு: நீதியரசர் நவாஸ் விலகல்!

 


வில்பத்து சரணாலயத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகளை

அழித்து மீள்குடியேற்றங்களை முன்னெடுத்தமைக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்வதிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இன்று திங்கட்கிழமை (27) விலகியுள்ளார்.


நீதியரசர்களான ஏ.எச்.எம்.டி. நவாஸ், சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மேன்முறையீடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனு விசாரணையிலிருந்து தான் விலகுவதாக நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் அறிவித்தார்.


இதற்கமைய, குறித்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி வேறொரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.


வில்பத்து காடுகளை அழித்து மக்களைக் குடியேற்றியமைக்கு எதிராக 2015ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், காடுகளை மீள வளர்ப்பதற்கான செலவை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொறுப்பேற்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இதன்படி, அவர் சுமார் 106 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என வனப்பாதுகாப்புத் திணைக்களம் மதிப்பிட்டிருந்தது.


இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியே ரிஷாட் பதியுதீன் உயர் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரும் இந்த மனு விசாரணையிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »