அமெரிக்காவில் வசிக்கும் வியட்நாம் தேரர் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட பிக்குகள், 'அலோகா' நாய் மற்றும் ஏனையோர் இன்று காலை 07:12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகர் நோக்கிப் புறப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மற்றுமொரு விமானம் மூலம் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் அறையை வந்தடைந்த பிக்குகளுக்குத் தானம் வழங்கப்பட்ட பின்னர், விமான நிலையத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் குழுவினரிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர். இதன்போது, அலோகா நாயின் உடல்நிலை குறித்து கால்நடை வைத்தியர்கள், விமான நிலைய பொலிஸார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியிருந்தனர்.
"ஏஹிபஸ்ஸிகோ" அமைதி நடைபயணத்தின் நிறைவு அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நேற்று (28) பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
