Our Feeds


Tuesday, April 28, 2026

Zameera

ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர ஆகியோரின் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு



 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகத் தங்களைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்தது.


குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள், பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (28) செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. 


இதன்போது, மனுதாரரான பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தங்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.


இத்தகைய கைது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்குமாறு அவர்கள் உயர் நீதிமன்றத்தைக் கோரியிருந்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயர் நீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை நிறைவு செய்வதாக அறிவித்தது. அத்துடன், இது தொடர்பான இறுதித் தீர்ப்பை பிறிதொரு திகதியில் அறிவிப்பதற்காக நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »